திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Friday, August 12, 2011

நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்


1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா

3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

விளக்கம்: நோன்பு நோற்பதென்பது வெறும் பசி, தாகத்தோடு இருப்பது மட்டுமல்ல, பசி தாகத்தை கட்டுப்படுத்துவதைப் போல மற்ற எல்லாத் தவறுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யார் நோன்புநோற்றுக் கொண்டு தவறான பேச்சுக்கள் இன்னும் தவறான செயல்களைச் செய்கின்றாரோ அவர் பசித்திருந்ததையும் தாகித்திருந்ததையும் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளமாட்டார். ஆகவே நோன்பு மாதத்தில் எல்லாத் தவறுகளையும் விட்டுவிடுங்கள். ஆனால் இன்று நோன்பு காலத்தில்தான் நோன்பு நோற்றவர்கள் இரவெல்லாம் வீணாக விழித்திருந்து சுப்ஹ தொழுகையின்றி தூங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலரோ பகலையெல்லாம் தூக்கத்திலேயே கழித்து, தொழுகைகளை விட்டு விடுகின்றார்கள். அல்லாஹ் நம்மீது நோன்பைக் கடமை யாக்கியது நாம் பாவங்களைச் செய்வதற்கும் ஃபர்லான தொழுகைகளை விடுவதற்குமா? நிச்சயமாக இல்லை! நாம் எல்லாப் பாவங்களையும் விட்டு தொழுகைகள் மற்றும் நல்அமல்களைச் செய்வதற்குத்தான் அல்லாஹ் அம்மாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றான். ஆகவே தவறுகளை முற்றாக விட்டு தொழுகைகளை உரிய நேரத்தில் தொழுது எல்லா நல்அமல்களையும் செய்யுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் எல்லா தவறுகளையும் முற்றாக விடுவதற்கு வாய்ப்பளிப்பானாக!

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites