திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Saturday, July 9, 2011

ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதினால் ஆணில் சிறிய குழந்தைகளுக்கு தங்கம் அணிவிப்பது தடையா ?

ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பது சரி. சிறிய குழந்தைகளுக்கு ஏன் அணியக் கூடாது?எல்லோருமே எல்லா கருத்துக்களையும் பின்பற்றுவதில்லை. சிறு சிறு தவறுகளைச் செய்யத் தான் செய்கின்றார். அப்படியிருக்கும் போது ஆண் குழந்தைகளுக்கு தங்க நகை அணிந்தால் என்ன தவறு? 

ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப் பட்டு விட்டது.
1. தூங்குபவர் விழிக்கின்ற வரை  2. சிறுவன் பெரியவராகும் வரை  3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர-)
நூல்கள்: நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா2031
எனவே தங்கம் அணியக்கூடாது என்ற கட்டளை பருவ வயதை அடைந்த ஆண்களை மட்டுமே கட்டுப்படுத்தும். பருவ வயதை அடையாத குழந்தைகளுக்கு இந்தச் சட்டம் இல்லை.
ஒரு பெண் தன்னுடைய குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிக் காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இந்தக் குழந்தைக்கு ஹஜ் இருக்கின்றதா?'' என்று கேட்டாள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்! உனக்குக் கூலி உண்டு'' என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 2377)
இந்த ஹதீஸில் குழந்தைக்கு ஹஜ் கடமையாக இல்லாவிட்டாலும்அதை அழைத்து வந்ததற்காக அதன் பெற்றோருக்குக் கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இதன்படி குழந்தைகளுக்குத் தங்கம் அணிவதற்குத் தடை இல்லாவிட்டாலும் பொதுவான தடையைக் கருதிகுழந்தைக்குத் தங்கம் அணிவிக்காமல் அதன் பெற்றோர் தவிர்த்துக் கொண்டால் அதற்கான நன்மை அவர்களுக்குக் கிடைக்கும்.
எல்லோரும் சிறு சிறு தவறுகள் செய்கின்றார்கள் என்பதால் நாமும் தவறு செய்யலாம் என்ற வாதம் ஆபத்தானது. ஒரு விஷயம் தடை செய்யப்பட்டுள்ளது என்றால் ஒரு முஃமின் அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)
இந்த வசனத்தின் அடிப்படையில் யார் ஒரு அணுவளவு தீமை செய்தாலும் அதற்கான பலனை மறுமையில் அனுபவிக்க வேண்டும். மற்றவர்கள் செய்கின்றார்கள் என்பதைக் காரணம் காட்டிநாம் செய்யும் பாவங்களை நியாயப்படுத்த முடியாது.

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites