திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Thursday, July 28, 2011

இறந்தாரை உயிர்ப்பிற்கும் மருத்துவ முயற்சி!

- மருத்துவர் எம்.கே.முருகானந்தன் -

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென நெஞ்சைப் பொத்திக் கொண்டு துடிக்கிறார். அவருக்கு ஏற்கனவே இருதய வருத்தம் இருப்பது உங்களுக்குத் தெரியும். இது மாரடைப்பு என்பது புரிகிறது. அம்பியூலன்சைக் கூப்பிடுவதற்கு முன்னரே சரிந்து விடுகிறார். முதல் உதவிச் சிகிச்சையில் பரிச்சியம் உள்ள நீங்கள் அவரின் நாடித் துடிப்பைப் பார்க்கிறீர்கள், அது நின்று விட்டது. மூக்கில் கை வைத்துப் பார்க்கிறீர்கள், சுவாசமும் நின்று விட்டது. அவசர அவசரமாக இருதய மசாஜ் செய்து செயற்கை சுவாசமும் கொடுக்கிறீர்கள். பிரயோசனமில்லை. வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது ஏற்கனவே மரணித்து விட்டதாக கூறுகிறார்கள்.

அநியாயச் சாவுதான் என்பதில் சந்தேகமில்லை.முதல் உதவி அறிவுள்ள ஒருவர் அருகிலிருந்து, வேண்டிய உதவியை உடனடியாகச் செய்தும் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது கவலைக்குரியதுதான்.

உண்மையில் அவர் எப்பொழுது இறந்தார்?

அவரது நிலையை யோசித்துப் பாருங்கள்?

என்ன நடந்தது? அவரது உறுப்புகள் யாவும் இருந்தது இருந்தபடியே எத்தகைய சேதமுமின்றி அப்படியே இருக்கின்றன. குருதி வெளியேறவில்லை. ஆனால் இருதயம் துடிக்கவில்லை, சுவாசப் பையும் இயங்கவில்லை. எனவே மூளையானது உள்ள பிராண வாயுவைச் சேமிப்பதற்றாக இயக்கத்தை நிறுத்தி விட்டது. அவ்வளவுதான். ஆயினும் மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக கூறி விட்டார்கள். உண்மையில் அவன் இறந்து விட்டானா?

இறப்பு என்பது என்ன? கலங்களின் (Cell) இறப்புத்தான், ஒருவனின் இறப்பு என்று வழமையாகக் கூறப்படுகிறது. அதாவது அந்த மனிதனின் இருதயத் துடிப்பு நின்றாலும், சுவாசம் நின்றாலும் மனிதன் உடனடியாக இறப்பதில்லை. இவை இரண்டும் செயற்படுவது நின்று 4-5 நிமிடங்களுக்குப் பின்னரே அவனது கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. உங்களது நண்பர் இறந்ததற்குக் காரணம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் அவரது கலங்களுக்கு பிராண வாயு கிடைக்காததால் அவரது மூளையினது கலங்கள் மீளச் செயற்பட முடியாதவாறு பாதிக்கப் பட்டதேயாகும். அதாவது அக் குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அவரது இருதயத்தையும், சுவாசப் பையையும் இயங்க வைக்க முடியாததேயாகும்.

இறப்புப் பற்றிய இக் கருத்துத்தான் இது வரை மருத்துவ உலகினால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருந்தது. ஆனால் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு கண்டுபிடிப்புக் காரணமாக மேற் கூறிய கருத்து கேள்விக்கு உரியதாகியுள்ளது. Univesity of Pennsylvanவைச் சார்ந்த Dr. Lance Becker ஒரு பிரேதப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆச்சரியமூட்டும் உண்மை வெளிப்பட்டது. மரணித்து ஒரு
மணித்தியாலயத்திற்கு மேற் சென்று விட்ட போதும் அந்த மனிதனது (அல்லது சடலமா?) கலங்கள் இறந்து விட்டதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை. வியப்படைந்த அவர் தனது பரிசோதனையைத் தொடர்நத போது மேலும் சில மணிநேரத்திற்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருப்பது தெரியவந்தது.

இறந்து சில மணி நேரங்களுக்குப் பின்னரும் கலங்கள் உயிரோடு இருந்த போதும் வைத்தியர்களால் ஏன் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும். 5 நிமிடங்கள் பிராண வாயு இல்லாதிருந்தால், அக் கலங்களுக்கு பிற்பாடு பிராண வாயு கிடைத்த போதும் அவை இறப்பதைத் தடுக்க முடிவதில்லை. அது தான் உண்மை. ஆனால் ஏன்?

இதற்கு விடை கிடைத்தால் உங்கள் கேள்விக்கும் விடை கிடைத்து விடும். இறந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப் போகும் முயற்சி ஆராய்ச்சியாக ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

ஆராய்ச்சியானது கலங்களின் உள்ளே உள்ள சிறிய துணிக்கைகளுக்கு இட்டுச் செல்கின்றன. மிட்டோகொன்ரியா (Mitochondria) எனும் அவைதான் கலங்களுக்குத் தேவையான சக்தியை, ஒட்சி ஏற்றம் மூலம் உற்பத்தி செய்கின்றன. இது இன்னுமொரு வித்தியாசமான கடமையையும் செய்கிறது. வழமைக்கு மாறான கலங்களை (உதா புற்றுநோய்க் கலங்கள்) நெறிப்படுத்தப்பட்ட முறையில் மரணிக்கச் செய்கின்றன. இது புற்றுநோய்க்கு எதிரான உடலின் பாதுகாப்பு திட்டம் போலச் செயற்படுகிறது. எனவே 5 நிமிடங்களுக்குப் பின்னர் திடீரென ஒட்சிசன் கொடுக்கும் போது அக் கலங்களுக்கும் புற்றுநோய்க் கலங்களுக்கும் இடையே வேறுபாட்டை உணர முடியாமல் மரணிக்கச் செய்கின்றனவோ என எண்ணுகிறார்கள்.

ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவில் நாம் செய்வது என்ன? இருதயம் நின்று விட்ட ஒருவரை 10-15 நிமிடங்களுக்கு பின்னர் கொண்டு வந்து சேர்க்க முடிகிறது. உடனே இருதயத்தைத் துடிக்க வைக்க மருந்துகள் கொடுப்பதுடன் பிராண வாயுவையும் பம்ப் செய்கிறோம். இரத்த ஓட்டம் இல்லாததால் பட்டினி கிடந்த இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்கிறோம். இது அவற்றின் மரணத்தில் முடிகிறது.

இதற்கு மாறாக மாற்று முறையில் சிகிச்சை செய்தபோது முடிவுகள் சாதகமாக இருந்தன. அதாவது இருதயக் கலங்களை பிராண வாயுவில் மூழ்கடிக்காமல் அப்படியே விட்டுவிட்டு உடலுக்கான இரத்த ஓட்டத்தை செயற்கையாக heart-lung bypass machine மூலம் கொடுத்துக் கொண்டு இருதயத்தை துடிக்க வைத்தார்கள். 80 சத விகிதமானவர்களைக் காப்பாற்ற முடிந்தது.

அத்துடன் குருதியின் வெப்பத்தை 37 இலிருந்து 33 டிகிரி செல்சியஸ்க்கு குறைப்பதன் மூலம், பிராண வாயுவால் மூழ்கடிக்கும் போது கலங்களுக்கு ஏற்படும் இரசாயன மாற்றங்களை குறைக்க முடியும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதை வெளியிடங்களிலும் செயற்படுத்தக் கூடியதாக உப்பும் ஜசும் சேர்ந்த ஒரு வித கலவையை ஊசி மூலம் ஏற்றும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவற்றை கடைப்பிடித்தால் மரணித்தவருக்கும் சிகிச்சை செய்து 'உயிர்ப்பிக்க' முடியும். ஆராச்சிகள் தொடர்கின்றன. அது நாளாந்த செயற்பாட்டிற்கு வந்து, அதுவும் எங்கள் நாட்டிற்கு வந்து சேரும் வரை மாரடைப்பு வராதிருக்க பிரார்திப்போமாக.

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites